Friday, May 23, 2014

தவில்

தவில்
    தவில் கருவி தோற்கருவி வகையைச் சார்ந்ததாகும். இது நாகசுரக் குழுவின் பக்கக் கருவியாக உள்ளது. இதனை மேள வாத்தியம் என்றும், இராட்சச வாத்தியம் என்றும் அழைப்பர். ஆலயம் தந்த தனிக் கருவியாகவும், ஆலய வழிபாட்டில் வாத்தியம் என்ற பெயரிலும், மேளம் என்ற பெயரிலும் அழைக்கப்படும். இக்கருவி மங்கல இசைக் குழுவோடு நையாண்டி மேளத்திலும் இடம் பெறுகின்றது. தற்போது கிளாரினெட், வயலின், மேண்டலின் கருவிகளோடும் இயைந்து இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் நாட்டியக் குழுவில் இடம் பெற்று வருகிறது.

 2.3.1 பெயர்க்காரணம்
    தவில், தவுள், தவல், மேளம், கொட்டு என்ற பெயர்களில் இக்கருவிக்குத் தவில் என்ற பெயரே இயற்பெயராகவும், ஏனையவை இதன் திரிபுகளாகவும் வழங்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழக அகராதி ‘தவில்’ என்று கூறுகிறது. கல்வெட்டில் தவில் என்றும், இலக்கிய வழக்காறுகளில் தவில் என்றும் சுட்டப்படுகிறது.
    இக்கருவியின் தொடக்கப் பயிற்சியில் த, தீ, தொம், நம் என்ற தத்தகாரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருக்கருவியால் இசைக்கப்படும் சொற்களில் ‘தத்தகாரமே’ முக்கிய நிலை பெறுகிறது. எனவே த + இல் = தவிலாயிற்று.இது குறித்துத் தவிலிசைமேதை மறைந்த வலங்கைமான் சண்முக சுந்தரம் குறிப்பிடும் பொழுது நாகசுரத்திற்குத் தாய் சுருதி, இது போல் தவிலுக்குத் தா என்ற சொல், தா என்ற சொல் சரியான உருவத்துடன் ஒலிக்கவில்லையெனில் தாய் இல்லாத குழந்தை போல் ஆகிவிடும் என்கிறார்.
சீறாப்புராணத்தில் இக்கருவி பற்றிய குறிப்பு உள்ளது.
முறை முறை பேரி தவில் பறை திடிமன்         (பத்றுப் படலம் - 248)
  • கல்வெட்டில
    கல்வெட்டில் தவில் என்றும் டொல் என்றும் இக்கருவி குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தவிலும் முரசும் சேமக் கலமும்’
தவில் அடிப்பவர் பற்றிப் பின்வரும் கல்வெட்டுக் கூறுகிறது.
    ‘டொல நாகசுரகாரர் தவில் அடிப்பவர்’,
  • மணமுழவு
    தவில் என்ற சொல் பிற்கால வழக்குச் சொல்லாகும். இதனைமணமுழவு என்று அழைத்தனர். மணமுரசு என்ற சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை குறிப்பிடுகின்றது. மணமுழவு என்பதனை மருதநிலப் பறை என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது. மணக்கோலம், மணப்பொருத்தம், மணம் புரிதல், மணமகன், மணமகள், மணமண்டபம், மணவறை, மணவறைத் தோழன் போன்ற சொற்களில் வரும் மணம் என்ற சொல் திருமணத்தைக் குறிப்பதால் மணமுழவு     என்பதும் திருமணத்திற்குரிய     முழவு     என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் திருமண விழாக்களின் பொழுது தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில் இசைக்கப்படுகிறது.

2.3.2 அமைப்பு
    தவிலை அவநத்த வாத்தியம் என்பர். அவநத்தம் என்றால் மூடப்படுவது என்பது பொருள். உருளை வடிவமான மரத்தில் குடையப்பட்ட பானையில் இரு புறங்களும் தோலால் மூடப்பட்ட கருவியாதலால் இது அவநத்த வாத்தியமாயிற்று.
  • தவில் கருவி
    பானை, வண்டோதரி, குண்டோதரி, கண்கள், தோல், வாள் வளையம், நாபி, புள், கழி உறை போன்ற உறுப்புகளைக் கொண்டிருக்கும், தவில்.
    தவில் பானை, பலா, வேம்பு, பூவரசு, சரக்கொன்றை மரங்களால் உருவாக்கப்படும், மரங்கள் பீப்பாய் வடிவில் குடையப்படும். உயரம் 24 அங்குலம், வாய்வட்ட அகலம் 13 அங்குலம் வாய்க்கனம் 1/2 அங்குலம் மத்தியில் மரத்தின் கனம் 1 அங்குலம். மையச் சுற்றளவு 48 அங்குலம் அளவில் உருவாக்கப்படும்.
    தவிலில் மந்தார சுருதி தவில், திமிரி தவில் என இரு வகைகள் உள. மந்தார சுருதி தவில் திமிரி தவிலைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும். சிவாலயங்களில் மந்தார சுருதி தவில்கள் இருப்பதனை இன்றும் காணலாம். இன்றைய நிலையில் திமிரி தவில்களையே கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
     வலந்தலைக்கும் (தவிலின் வலப்பகுதி) தொப்பிக்கும் (கழியால் தட்டும் பகுதி) ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டது. தற்போது தொப்பிக்கு இளம் கன்றின் தோலையும் பயன் படுத்துகின்றனர். வலந்தலை தொப்பி வளையங்கள் மூங்கில், துணி, பசைகளால் வட்ட வடிவில் உருவாக்கப்படும். தொப்பியை விட வலந்தலை அளவில் பெரியதாக இருக்கும். வலந்தலை தொப்பியை இணைக்க மாட்டுத்தோல் வார்களைப் பயன்படுத்துவர். இவ்வார்களை இழுத்து இக்கருவியின் நாதத்தை மேம்படுத்துவர். இதனை வார் பிடித்தல் என்பர். தற்காலத்தில் வார் நீக்கப்பட்டு, துவாரம் போட்ட இரும்புப் பட்டையால் திருகாணியின் மூலம் இழுத்து அமைக்கின்றனர். நின்று கொண்டு தோளில் சுமந்து கொண்டு இசைப்பதற்குரிய நிலையில் துணி நாடாக்களைப் பயன்படுத்துவர். இந்நாடாக்கள காவிநிறத்தில் அமைந்திருக்கும். தவிலைத் துணி உறையால் மூடி இருப்பர்.
  • செட்டுத் தவில்
    தவிலிசைக்குப் பெருமை சேர்த்த கலைஞர்கள் பலர் உள்ளனர். நாகசுரம், தவில், தாளம், ஒத்து என்ற நான்கும் சேர்ந்ததனை நமனம் என்று பழங்காலத்தில் குறிப்பிடுவர். இக்குழுவில் ஒவ்வொருவர் மட்டும் இடம் பெறுவர். இவர்கள் மேற்கொள்ளும் இசை நிகழ்ச்சியைச் சேவகம் என்பர். ஒரு மேளக் குழுவில் நிரந்தரமாக இடம் பெறும் தவில் கலைஞரைத் தவில்காரர் என்பர். இதனால் இவர்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பும், நெருக்கமும் இருக்கும். பின்பு இக்குழுவில் தனியாக ஒரு சிறப்பு வாய்ந்த தவில்காரர் இடம் பெறலாயினர். இவரைத் தனித்தவில்காரர்என்பர்.தனித்தவில் இசைக்கும் முறையைத் தவிலிசை மேதை நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். இவர்கள் காலத்தில் இசைக் குழுவில் ஒரு தவில் இடம் பெறும் நிலைமாறி இரு தவில்கள் இசைக்கும் முறை தோன்றியது.

No comments:

Post a Comment