Sunday, October 17, 2010
நாதஸ்வர ஓசையிலே
காசீம்-பாபு என்ற முஸ்லிம் சகோதரர்களின் காதிற்கினிய நாதஸ்வர ஓசை முன் செல்ல, அதை பின் தொடர்ந்து பெருமாள் ஆனந்தமாய் பின் செல்லும் நிகழ்ச்சி, ஒவ்வொரு திருமலை பிரம்மோற்சவ விழாவிலும் நடக்கக்கூடிய ஆனந்த அனுபவம். நாதஸ்வரத்தில் கரை கண்டவரும், அதற்காகவே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவருமான ஷேக் சின்ன மவுலானாவின் பேரன்கள்தான் காசீம்-பாபு.
இருவருக்கும் சின்ன வயதில் இருந்தே நாதஸ்வரத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு, அவர்களை பல படிகள் உயர்த்தி உள்ளது. பல்வேறு விருதுகளும், சிறப்புகளும் பெற்று இருந்தாலும், திருமலை திருப்பதி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக இருந்து, பெருமாளின் பிரம்மோற்சவ புறப்பாட்டின் போது, நாதஸ்வரம் வாசித்து செல்வதையே பெரும்பேராக கருதுகின்றனர். திருமலையில் ஒரு நல்ல பழக்கம், யாருக்காகவும், எதற்காகவும் சுவாமி புறப்பாட்டை ஒரு நிமிடம் கூட தாமதம் செய்ய மாட்டார்கள். மணி அடித்து, திரை விலகி சுவாமி புறப்பட்டு விட்டார் என்றால், சர்வ நிச்சயமாக கையில் உள்ள கடிகாரத்தை காலை 9 மணிக்கு சரி செய்து கொள்ளலாம். அப்படி புறப்படும் சுவாமி 2 மணியிலிருந்து 3 மணி வரை மாடவீதிகளில் சுற்றி வந்து திரும்ப நிலைக்கு வருவார். இந்த நேரம் முழுவதும் சுவாமிக்கு முன் இருந்து காசீம்-பாபு சகோதரர்கள் நாதஸ்வரம் வாசித்தபடி செல்வர். பெருமாளின் புகழ்பாடும் அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகள், பாபநாசம் சிவன் பாடல்கள் உள்ளிட்ட பல பக்தி ரசம் பொங்கும் பாடல்களை தங்களது நாதஸ்வரத்தில் இவர்கள் வாசிக்கும் போது கேட்பவர்கள் மெய்மறந்து விடுவர். மேலும், சுவாமி வலம் வரக்கூடிய வாகனத்திற்கு ஏற்ப பாடல்களை தேர்வு செய்து இசைப்பதும் இவர்களது தனிச்சிறப்பு. நாதஸ்வர இசையால் உலகின் பல நாடுகளிலும் வலம் வரும் இந்த சகோதரர்கள் தங்களது இருப்பிடமான திருச்சி ஸ்ரீரங்கத்தில், "சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம்' அமைத்து, நாதஸ்வரம் ஏற்கனவே கற்றவர்களுக்கு மேல்வகுப்பு போல நுட்பமான விஷயங்களை இலவசமாக கற்றுத்தரும் சேவையையும் செய்து வருகின்றனர். காசீம்-பாபுவின் நாதஸ்வர இசை மழையில் நனைய வேண்டுமா? அக்., 8ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை நடைபெறும் திருமலை பிரம்மோற்சவ விழாவிற்கு செல்லுங்கள். காலை 9 மணிக்கு திரை விலகவும், உங்கள் காதில் நாதஸ்வர இசை தேனாய் விழும். ***
நன்றி : தின மலர் "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=2143&ncat=2"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment