Sunday, September 9, 2012

35 தாளங்கள்

புதுவையில் நடந்த இசைவிழா ஒன்றில் பத்மஸ்ரீ திரு வலையபட்டி அய்யா முன்னிலையில் பஞ்ச ஜாதி தாள தவில் இசை சங்கமம் (பஞ்ச தாளங்களை ஒரே நேரத்தில் போடச் செய்து அதே நேரத்தில் தவிலில் கோர்வை வாசித்து சமகாலத்தில் முடிப்பது) என்ற நிகழ்ச்சியை தவில் கலைஞர் ஒருவர் நடத்தியுள்ளார். 

அவர் ரூபக ஜாதியில் ஒரே கோர்வையை பஞ்ச தாளத்தில் வாசித்துவிட்டு இதே போல் வேறு ஜாதியில் வேறு யாரவது வாசித்துவிட்டால் பொன்னும் ரொக்க பணமும் தருவதாக கூறியுள்ளார்.

அதை நாம் செய்து பார்க்கலாம் என்று நான் எடுத்த முயற்சி.


Saturday, July 28, 2012

மேளகர்த்தா ராகங்கள்

எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஹிந்துஸ்தானி இசை பாணியில் இதை ‘தாட்’ எனக் கூறுவர். இந்த ‘தாட்’ களிலிருந்து பலவிதமான ராக அமைப்புக்களை ஹிந்துஸ்தானி இசை பெற்றுள்ளது. மொத்தம் பத்துவகையான தாட்களே இருந்தாலும், நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன.
அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த மேளகர்த்தா ராகங்களாகும். இந்த மேளகர்த்தா ராக சூத்திரத்தை அறியுமுன், நாம் சில அடிப்படைகளை நிறுவ வேண்டும். ஸ்வர வரிசைகளில் ஏன் ஏழு ஸ்வரங்களே இருக்கின்றன என்பது பல இசை வல்லுனர்களைக் குழப்பியபடியே உள்ளது. இதற்கான காரணத்தை நவீன கணிதம் மற்றும் இயற்பியல் சார்ந்த அலைக் கோட்பாடுகளின் (wave theory) படி ஆராய முடியும். ஆனாலும், பண்டைய காலத்தில் இதற்கான அடிப்படையை எப்படிக் கண்டடைந்தார்கள் என்பது இன்றளவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
ஸ்வரங்களின் ஒலியை குறிப்பிட்ட நுண்ணலைகளாக (அலைவரிசை) பிரிக்க முடியும். இயற்பியலில் மனித காதுகளால் வித்தியாசத்தை உணரக்கூடிய அலைவரிசைகள் என்று ஒரு பாகுபாடு உள்ளது. நம்மால் கேட்கக்கூடிய அலைவரிசை 16 ஹெர்ட்ஸ் (Hz) முதல் 16, 384 ஹெர்ட்ஸ் வரை மட்டுமே. இதற்குள்ளாகவே நம்மால் ஒலியை உணர்ந்து, பகுக்க முடியும். குறிப்பாக 240 ஹெர்ட்ஸ் முதல் நம் காதுகளால் அலைவரிசை மாற்றங்களை நன்றாக உணர முடியுமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக, 240 ஹெர்ஸ் என்பதை நம்முடைய முதல் ஒலிக்கான அலைவரிசையாகக் கணக்கிடலாம். இதன் மூலம் ஹார்மானிக்ஸ் (Harmonics) எனப்படும் மற்ற அலைவரிசைகளைக் கணக்கிடமுடியும்.
இயற்பியலின் படி ஒவ்வொரு அலைவரிசையும் பலதரப்பட்ட ஹார்மானிக்ஸ்களைக்கொண்டுள்ளது. இவை அனைத்தையும் நம்மால் உணர முடியாது. Fourier Series எனப்படும் கணித இயலின் படி இதைக் கண்டறிய முடியும். ஆனால், நம் காதுகளால் இந்த அனைத்து விதமான ஒலிகளின் அலைவரிசையின் வித்தியாசத்தை உணர முடியாது. நம் காதுகள் ஒலியை மற்ற ஒலிகளோடு ஒப்பிடும்போது அதன் அலைவரிசை மூலமே வித்தியாசப்படுத்த முடியும். ஒரு ஒலியமைப்பானது மற்றொன்றைவிட இரு மடங்கு அதிகமான அலைவரிசையில் இருக்கும்போது நம் காதுகளுக்கு ஒன்றாகவே இருக்கும். இதனாலேயே நாம் Octaves எனக் கூறுவது அடிப்படை அலைவரிசைக்கும் அதைவிட இரு மடங்கு அதிகமாக இருக்கும் அலைவரிசைக்கும் இடையே இருக்கும் ஒலிகளே ஆகும்.
அதாவது – 240 ஹெர்ட்ஸ் முதல் 480 ஹெர்ட்ஸ் வரை.
நாம் முன்னரே பார்த்த படி, நம் காதுகளால் வித்தியாசத்தை உணரக்கூடிய ஒலியமைப்புகள் harmonic series இல் அமைவதாய் இருக்கும். 240க்கும அடுத்த ஒலிநிலை இருப்பது Geometric progression என்ற விதிப்படி வகுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ச முதல் நி வரை இருக்கும் ஒலியமைப்பு இவ்விதமாக அமைகிறது:
ரி நி ச:
240 256 300 320 360 384 450 480
carnatic_tamilhindu_2
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்
சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் பின்வரும் பாடல் உள்ளது -
‘ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை’
ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் போடப்பட்ட நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையே. ச-ப வரிசையை குரல்-இளி என தமிழிசையில் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
அகநிலைக்குரிய நரம்பின திரட்டி
நிறை, குறை கிழமை பெறுமென மொழிப.
மேற்கூறிய சிலப்பதிகார வரிகள்படி, சுர வரிசையை குறை, நிறை எனப் பகுத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதாவது கீழே உள்ள பட்டியல் படி, சுரங்களை குறை, நிறையென 12 சுரங்களாய் வகுத்துள்ளனர். ஆங்கில எழுத்துக்கள் மூலம் சுலபமாக இவற்றைக் குறிக்க முடியும்.
ச – ஷட்ஜம் – குறை, நிறை கிடையாது – S
ரி – சுத்தரிஷபம் -குறை – R2
ரி – சதுசுருதிரிஷபம் – நிறை. – R3
க – சாதாரண காந்தாரம் -குறை – G2 = R3
க – அந்தரகாந்தாரம் – நிறை – G3
ம – சுத்தமத்யமம் – குறை -M1
ம – பிரதிமத்யமம் – நிறை – M2
ப -பஞ்சமம் -P
த – சுத்த தைவதம் – குறை – D1
த – சதுசுருதி தைவதம் – நிறை – D2=N1
நி – கைசிகி நிஷாதம் – குறை – D3=N2
நி – காகலி நிஷாதம் – நிறை- N3
இதில் ச-ப எனும் ஒலி நிலைகளில் நிறை/குறை நிலைகள் கிடையாது. ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலான சுரக்கோர்வையை ஸ்தாயி எனக்கூறுவர். தமிழிசை மரபில் இதற்கு மண்டிலம் என்றும் பெயருண்டு.
‘வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓர் ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்’
- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.
முதல் மண்டிலத்தின் அலைவரிசை 240 ஹெர்ட்ஸ் எனக்கொண்டால், இரண்டாவதை 480 ஹெர்ட்ஸ் எனப் பண்டைய தமிழிசையில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இரட்டித்த குரல் என்றும் பெயர்.
இப்படியாக ஏழு சுரங்கள் பன்னிரண்டாகப் பிரிவது போல், இந்தப் பன்னிரண்டும் நுண்ணிய சுரங்களாய் இருபத்திரண்டு ஆகப் பிரிக்கலாம். ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் சங்க கால இலக்கியங்கள் மூலம் இதனை நிரூபித்துள்ளனர்.
இதுவரை நாம் பார்த்தவை மேளகர்த்தா ராக அமைப்புக்கு அடிப்படையாகும்.
மேளகர்த்தா ராகம் அமைப்பு
மேளகர்த்தா ராக அமைப்புகளை அடைய, சில அடிப்படை விதிகள் உள்ளன.
1. ஒவ்வொரு தாய் ராகத்திலும், எல்லா சுரங்களும் இருத்தல் அவசியம்.
2. ஆரோஹணம் (ஏறுநிரல்), அவரோஹணம் (இறங்குநிரல்) – இவை இரண்டிலும் சுரங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும்.
3. மேல் ச, கட்டாயம் இருத்தல் வேண்டும்.
ஆக, கண்டிப்பாக ஒரு ச, ப இருத்தல் வேண்டும். இரண்டு ’ம’க்களில் (மத்யமம்) ஒன்றாவது இருத்தல் வேண்டும். இரண்டு ரி, க வில் ஒன்றாவது இருத்தல் வேண்டும். ஒரு த, நி இருத்தல் வேண்டும்.
மேளகர்த்தா ராகங்கள் மொத்தம் 72 ஆகும். இவற்றை நாம் கடபாயதி என்ற முறைப்படி சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இந்த முறைப்படி, சமஸ்கிருத எழுத்துக்களின் எண்களை ராகத்தின் பெயரோடு இணைத்துப் படிக்க வேண்டும். சமஸ்கிருத மொழிப்படி:
1 2 3 4 5 6 7 8 9 0
Ka kha Ga Gha Nga Ca Cha Ja Jha Nya
Ta Tha Da Dha Na Ta Tha Da Dha Na
Pa Pha Ba Bha Ma - - - - -
Ya Ra La Va Sha Sha Sa Ha - -
1. ராகத்தின் முதல் இரு எழுத்துக்களை தனியாக எடுத்து, அதற்கான எண்களை இந்த கட்டத்தின் மூலம் நிரப்பவேண்டும்.
72 ராகங்களில் முதலாவதாக இருக்கும் கனகாங்கி ராகம்.
கனகாங்கி -முதல் இரு எழுத்துகள் – க, ன (1, 0)
2. இரண்டாம் விதிப்படி, இந்த எண்களை கடைசியிலிருந்து படிக்க வேண்டும். (பழைய இந்திய முறைப்படி)
கனகாங்கி – 01.
ஆக, இது முதல் மேளகர்த்தா ராகம்.
இப்போது இந்த எண்ணிலிருந்து, சுர அமைப்பை பெற என்ன விதியைக் கடைபிடிப்பது? இதற்கும் விதிகள் உண்டு.
1. ஒன்று முதல் 36 வரை உள்ள மேளகர்த்தா எண்களுக்கு – M1.
2. 37 முதல் 72 வரை – M2
3. கிடைக்கும் மேளகர்த்தா எண் 36ஐ விடக் குறைவாக இருந்தால், அந்த எண்ணில் ஒன்றைக் குறைத்துக்கொண்டு, ஆறால் வகுக்க வேண்டும். 36ஐ விட அதிகமாக இருந்தால், அந்த எண்ணிலிருந்து 36ஐக் கழித்துக் கிடைக்கும் எண்ணில் ஒன்றைக் குறைத்துக் கொண்டு ஆறால் வகுக்க வேண்டும்.
இப்படி வகுத்துக் கிடைக்கும் ஈவு (Quotient) எண்ணையும், மீத எண்ணையும் வைத்து மற்ற சுரங்களைக் கணக்கிடலாம்.
ஈவு எண் ரி
0 R1 G1
1 R1 G2
2 R1 G3
3 R2 G2
4 R2 G3
5 R3 G3
மிச்ச எண் நி
0 D1 N1
1 D1 N2
2 D1 N3
3 D2 N2
4 D2 N3
5 D3 N3
இதன்படி கனகாங்கி ராகத்தின் அமைப்பை கண்டுபிடிக்கலாம்.
1. தாய் ராகம் ஆதலால் ச, ப கண்டிப்பாக உண்டு.
2. முதல் மேளகர்த்தா எண்ணானதால் இதற்கு – M1
3. மேளகர்த்தா எண் 1; 36ஐ விட சிறியது. எனவே (1-1)/6. ஈவு:0, மிச்சம் – 0
4. ஆகையால் R1, G1, D1, N1 ஆகிய சுரங்களே சேரும்.
5. இதன்படி கனகாங்கி ராகத்தின் சுர அமைப்பு :
ஆரோஹணம் – ச ரி க ம ப த நி ச:
அவரோஹணம் – ச:நி த ப ம க ரி ச
என்ற வரிசைக்கிரமப்படி அமைந்துள்ளது.
அடுத்தது இன்னொரு உதாரணத்தின் மூலம் கடயபாதி வழக்கத்தை எடுத்தாளலாம்.
ராகம் – ஹேமாவதி.
1. மேளகர்த்தா எண் -ஹே, மா – ha, ma – 8, 5
2. இதன் மேளகர்த்தா எண் – 58.
3. மேளகர்த்தா எண் 37க்கு மேல் உள்ளதால் – இதில் M2 உள்ளது.
4. மற்ற சுரங்களைக் கண்டுபிடிக்க: 36ஐ விட 58 பெரியது; எனவே 58-36 = 22. (22-1)/6. ஈவு, 3 மிச்சம் 3.
5. இதனால் மேலேஇருக்கும் கட்டத்தின் மூலம்- R2, G2, D2, N2 என்ற சுர அமைப்புகளை அடைகிறோம்.
ஆரோஹணம் -S, R2, G2, M2, P, D2, N2, S
அவரோஹணம் – S, N2, D2, P, M2, G2, R2, S
சுலபமான சில பயிற்சிகள் மூலம், இதை எளிதில் கணக்கிட முடியும்.
சக்கரம்
இந்த 72 மேளகர்த்தா ராகங்களை, பனிரெண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். இதைச் சக்கரங்கள் எனக் கூறுவர். ஆக மொத்தம் 12 சக்கரங்கள். ஒவ்வொன்றிலும் ஆறு ராகங்கள் இருக்கும்.
மேளகர்த்தா ராக சக்கரம்
மேளகர்த்தா ராக சக்கரம்
ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் ராகங்களில் தைவதமும், நிஷாதமும் மட்டுமே மாறுபடும். இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் அந்தச் சக்கரத்தின் எண்ணைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.
1. இந்து (நிலவு , ஒரே நிலவு)
2. நேத்ரம் (இரு கண்கள்)
3. அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ).
4. வேதம் (நான்கு வேதங்கள்)
5. பாணம் (மன்மதனின் 5 பாணங்கள்)
6. ருது ( 6 ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)
7. ரிஷி (சப்த ரிஷிகள்)
8. வசு (அஷ்ட வசுக்கள்)
9. பிரம்மா (நவ பிரம்மாக்கள்)
10. திசி (பத்து திசைகள், வழக்கமான 8 திசைகளோடு, மேல், கீழ் இரண்டும் சேர்த்து).
11. ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)
12. ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்).

Courtesy: http://www.tamilhindu.com/2009/08/isaikkooruhal_04/