Friday, December 16, 2011
பேரிசையின் பின்னணி: தவில் கண்ட மாற்றங்கள்
ப.கோலப்பன் | இதழ் 60 | 26-11-2011 |
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். தமிழகம் முழுவதும் இருந்தும் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். திருமணத்தின் முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்காகவும் முகூர்த்தத்துக்காகவும் நாகசுர கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார். நண்பர்களிடமும் அது குறித்து தெரிவித்து, சீக்கிரமாக வந்திருந்து கச்சேரி கேட்குமாறு கூறியிருந்தார்.
சமீப காலத்தில் நான் கேட்ட நாகசுர கச்சேரிகளில் இது சிறப்பானது என்று சொல்வேன். நாகசுரம் வாசித்த சின்னமனூர் கார்த்திக்கும் இடும்பாவனம் இளையராஜாவும் நல்ல இணை. நாகசுரத்தில் நல்ல இணைகள் வாய்ப்பது அரிது. அப்படி நல்ல இணைகள் வாசிக்கும்போது, இரண்டு நாகசுரம் வாசிப்பது மாதிரி கேட்காது. ஒருவர் மட்டுமே வாசிப்பது போன்று தோன்றும். காருக்குறிச்சி அருணாசலத்துடன் இணையாக வாசித்தவர் இன்னொரு அருணாசலம். அவர் வாசித்த ஒலிப்பதிவுகளைக் கேட்கும் போது ஒரு நாகசுரம் வாசிப்பது போன்றே கேட்கும். இராமனைப் பின்தொடரும் இலட்சுமணன் போல இரண்டாம் நாகசுரம் வாசித்திருப்பார்.
கார்த்திக்கும் இளையராஜாவும் சுதி சுத்தமாக வாசித்தார்கள். இராகத்திலும், கீர்த்தனையிலும் சிறப்பான அவர்களுடைய ஞானம் வெளிப்பட்டது. முக்கியமாக கல்யாணி வாசித்து, இராகமாலிகை வாசித்தார்கள். துக்கடாக்களுக்குப் பதிலாக கர்நாடக இராக மெட்டுகளில் அமைந்த சினிமா பாடல்களையும் பக்திப் பாடல்களையும் வாசித்தார்கள். கேதாரம் வாசித்து இது ஒரு பொன்மாலைப் பொழுது, மாண்டு வாசித்து ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே, சிந்துபைரவி வாசித்து சின்னஞ்சிறு பெண்போலே என உருக்கினார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து திருமண மண்டபத்தில் அமர முடியாமல், வெளியே சென்று விட்டார்கள்.
“ஒரே சத்தமா இருக்குங்க. தவிலுக்குப் போய் யாராவது மைக் வைப்பார்களா?” என்று சென்னையில் உள்ள சபாக்களில் ஒலிக்கும் குரல் திருமண மண்டபத்தின் வெளியேயும் ஒலித்தது. இது போன்று திருமண வீடுகளில் ஆர்க்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்து சினிமா பாடல்கள் பாடப்படும்போதும் இதே காதைப் பிளக்கும் ஒலிதான் கேட்கும். நமது அரங்கங்களின் அமைப்பு அப்படி. சினிமா பாடல்களின் சத்தம் காதுக்குப் பழகி விட்டது. தவில் சத்தம் எப்போதாவது கேட்பதால் சிரமமாக இருக்கிறது அவ்வளவுதான்.
[நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில்]
நாஞ்சில் வீட்டுத் திருமணத்தைப் பொறுத்தவரை, எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவதற்கான வாய்ப்பை தவில் சத்தம் கெடுத்து விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆகவே ஒவ்வொருவராக வெளியேறி வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் உரையாடலில் பங்கெடுத்தாலும், என் காதுகள் என்னை அறியாமல் மண்டபத்திற்கு உள்ளே சென்று கொண்டிருந்தன. அதே சமயத்தில் தவில் ஒலி குறித்த எண்ணமும் வளர்ந்தது.
தவில் மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது. மலைக்கோட்டை பஞ்சாமி என்று அழைக்கப்படும் பஞ்சாபகேசபிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன் என கடந்த காலத்து வித்வான்கள் தொடங்கி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி என மாபெரும் தவில் கலைஞர்கள் வரிசை நீள்கிறது. ஆனால் இவர்கள் எல்லோருடைய வாசிப்பையும் தொடர்ந்து கேட்கும் ஒரு இரசிகன், காலந்தோறும் தவில் வாத்தியத்தின் சத்தத்திலும் வாசிப்பிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் புரிந்து கொள்வான்.
[திருப்பாம்புறம் சகோதரர்களின் மல்லாரி]
தவில் வாத்தியம் 1960-களில், அதனுடைய வடிவமைப்பில் ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அந்த மாற்றம் தவில் கலைஞர்களின் சிரமத்தை பெருமளவில் குறைத்தாலும், ஒலி அமைப்பில் அது கொண்டு வந்த மாற்றம் தொடர்ந்து விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. நாஞ்சில் நாடனின் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்தவர்களை வெளியே நின்று உரையாடத் துரத்தியது இந்த மாற்றம்தான். இந்த மாற்றத்தைப் புகுத்தியவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பொறையார் வேணுகோபால் பிள்ளை. பலமுறை அவரைச் சந்தித்து தவில் குறித்து உரையாடியிருக்கிறேன். பெரிய ஞானஸ்தர். கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். பழைய சங்கீத வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்வார். கிடிகிட்டி வாசிப்பில் புகழ்பெற்றிருந்த தில்லையாடி சீனிவாசம் பிள்ளையின் பேரன் அவர். நந்தனார் திரைப்படத்தில் சேரியில் உள்ள மக்கள் சாமியாடிக் கொண்டிருக்கும்போது கிடிகிட்டி வாசிக்கப்படும். இப்போது இந்த வாத்தியம் வழக்கொழிந்து காணாமல் போய் விட்டது.
இந்த இடத்தில் சிரமம் என்று நான் குறிப்பிடுவது தவிலுக்கு வார் பிடிப்பதுதான். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சவடால் வைத்தியாக நடித்திருக்கும் நாகேஷைப் பார்த்து தவில் வித்வான் பாலையா, “இந்த நரம்புப் பயலை செமத்தியாக வார் பிடிக்கிறேன்” என்று கோபத்துடன் கூறுவார். வார் பிடிப்பது அத்தனை எளிதல்ல. கச்சேரி களை கட்டியிருக்கும்போதும், தவில் வித்வான் கற்பனை பொங்க தனி வாசித்துக் கொண்டிருக்கும் போது தவிலின் வார்ப்பிடிகள் தளர்ந்து போனால் கச்சேரி சோபிக்காது. காதலியை ஆரத்தழுவும்போது அவள் எதையோ நினைத்து திடீரென அழுது வடிந்தால், காதலன் நிலை என்னவாக இருக்குமோ அதே நிலைதான் தவில் வித்வானுக்கு ஏற்படும். மீண்டும் வாரை இறுக்கிக் கட்டுவதற்குள் கச்சேரி முடிந்து போகும். அந்த சிரமங்களை நீக்கி, வாருக்குப் பதிலாக இரும்புப் பட்டைகளை அறிமுகம் செய்து தவிலில் மாற்றத்தை உருவாக்கினார் வேணுகோபால் பிள்ளை.
உடல் ரீதியாக தனக்கு ஏற்பட்ட சிரமங்களை சரி செய்வதற்காக பல ஆண்டுகள் உழைத்து வேணுகோபால் பிள்ளை இதைச் செய்தார். அவர் ஒரு காலத்தில் சிதம்பரம் நாகசுர வித்வான் இராதாகிருஷ்ணபிள்ளையிடம் “செட் தவில்”, அதாவது அந்தக் குழுவிலேயே நிரந்தரமாக இருந்து வாசி்த்து வந்தார். இன்னொரு தவில்காரர் பேரழகன் என்று கருதப்பட்ட திருவிந்தளூர் இராமதாஸ். இப்போதெல்லாம் சிறப்புத் தவில் வந்து விட்டது. சிதம்பரம் கோயிலில் ஆனி மஞ்சனத்துக்கு இராதாகிருஷ்ணபிள்ளை வாசிக்க, வேணுகோபால் பிள்ளை தவில் வாசித்துக் கொண்டிருந்தார். நின்று கொண்டுதான் வாசிக்க வேண்டும். வாசிப்பு முடியும் வரை தோளில் இருந்து தவிலைக் கழற்றும் வழக்கம் இல்லை. திடீரென வேணுகோபால் பிள்ளைக்கு காய்ச்சலுடன் குளிரும் சேர்ந்து வாட்டியது. ஆனால் கச்சேரியில் இடையே வாசிப்பதை நிறுத்த முடியாது. கடைசியாக வாசித்து முடிந்ததும் துவண்டு விழுந்தார். காலையில் எழுந்து பார்த்தால் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு விரை வீக்கம் கண்டிருந்தது. அதன் விளைவுதான் காய்ச்சல்.
வேணுகோபால் பிள்ளைக்கு உலகமே இருண்டு போய் விட்டது. விரை வீக்கம் வந்த பிறகு இந்த வாத்தியத்தை தொடர்ந்து வாசிக்க முடியுமா? வாரை இழுத்து கட்ட முடியுமா? இசைக் கலைஞரான அவருக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. என்ன செய்வது என்று தெரியமால் தவித்துக் கொண்டிருந்தார்.
இந்த காலக்கட்டத்தில் அவர் மாயூரத்தில் ஒரு திரையரங்கில் சகுந்தலை படம் பார்க்க சென்றார். பிருகா சாரீரத்துக்குச் சொந்தக்காரரான ஜி.என். பாலசுப்பிரமணியமும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் நடித்தப் படம். அந்த காலத்தில் தியேட்டரில் இரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பேண்ட் கச்சேரி ஏற்பாடு செய்திருப்பார்கள். அதில் வாசிக்கப்பட்ட டிரம்சைப் பார்த்ததும் வேணுகோபால் பிள்ளைக்கு ஒரு பொறி தட்டியது. டிரம்சில் நட்டுகளையும் போல்டுகளையும் போட்டுத்தான் தோல் அல்லது சிந்தடிக் பைபரில் செய்யப்பட்ட தோலை இணைத்திருப்பார்கள். ”தவிலில் இப்படி செய்தால் என்ன?” என்று யோசித்து இரவும் பகலும் அதே சிந்தனையாகவே இருந்தார்.
திருப்பூரில் ஒரு திருமணத்துக்கு வாசிக்க சென்ற போது அங்கு ஜவுளிகளை பார்சல் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மெல்லிய உலோகத்தால் ஆன வார்களை எடுத்துக் கொண்டு வந்தார். ஊருக்கு வந்து, திருவாரூரில் தனது நண்பரான மீனாட்சி பவுண்டரிஸ் முதலாளியிடம் எண்ணத்தை எடுத்து வைத்தார். அவரும் இவரும் சேர்ந்து தவில் குத்தியின் நடுவே ஒரு இரும்பு வளையத்தை மாட்டி, வலந்தலையையும் தொப்பியையும் இந்த உலோக வார்களால் இணைத்தார்கள். ஆனால் அதிகமாக இறுக்கிக் கட்டிய போது வார் துண்டாகியது. ஆகவே வாரின் கனத்தைக் கூட்டி பரிசோதனை செய்தார்கள். சரியாக வந்தது. ஆனால் தவிலின் சத்தம் வேறு மாதிரியாகக் கேட்டது. பல நாள் தொடர்ந்து போராடி, நடுவில் உள்ள இரும்பு வளையத்தை இடம் மாற்றி மாற்றி சோதனை செய்து ஒரு வழியாக தவிலின் சத்தத்தை சரி செய்தார்.
இப்படி உருமாற்றம் செய்யப்பட்ட தவிலை அவர் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தார். வெளியே யாரிடமும் சொல்லவில்லை. சுவாமிமலையில் நாச்சியார்கோயில் இராகவபிள்ளையுடன் சேர்ந்து வாசிக்கும் போது இந்தத் தவிலையே பயன்படுத்தினார். அப்போது நடந்த சம்பவத்தை வேணுகோபால் பிள்ளை இப்படி விவரித்தார்.
[நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை]
“இராகவப்பிள்ளையின் காலப்பிரமாணம் பிரசித்தி பெற்றது. ஆணி அடித்து இறுக்கி விட்டாற்போல் அங்கும் இங்கும் நகர முடியாத அளவுக்கு காலப்பிரமாணத்தை அமர்த்தி விடுவார். அவர் காலத்தில் ஸ்பெஷல் இராகவன் என்று அழைக்கப்பட்டார். அன்று துரதிருஷ்டவசமாக இராகவபிள்ளையின் தவிலின் வார்கள் தளர்ந்து விட்டன. அவர் வாசித்தாலே “தா தா” என்ற சத்தம் கம்பீரமாக எழும். (வேதாரண்யம் வேதமூர்த்திக்கு இராகவப்பிள்ளை தவில் வாசிப்பதைக் கேட்டுப்பாருங்கள்.) அன்று அந்த சத்தம் எழவில்லை. ஆனால் என்னுடைய தவில் முழங்கிக் கொண்டிருந்தது. இராகவபிள்ளை என்னுடைய தவிலை உற்றுப்பார்த்தார். காலையில் மாப்பிளே தவில் நல்லா இருக்குய்யா. என்ன செய்திருக்கிறே என்று கேட்டார். ஜாகைக்கு வாருங்கள் காட்டுகிறேன் என்றேன். எனக்கு லேசாக பயம். சம்பிரதாயத்துக்கு விரோதமாக இப்படி செய்திருக்கிறேயே என்று அவர் வருத்தப்படக்கூடுமோ என்று அஞ்சினேன். ஆனால் தவிலின் முகச்சீலையை விலக்கிக் காட்டியதும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார். நல்லா இருக்கு என்று ஆசி வழங்கி விட்டார். ஆனால் நாச்சியார்கோவிலில் எனக்குப் பாராட்டு விழா நடந்த போது அந்த மேதை உயிரோடு இல்லை. இது என்றைக்கும் ஆறாத வருத்தமாக இருக்கிறது.”
இந்த காலக்கட்டத்துக்குப் பிறகு இரும்பு ராடுகள் பொருத்தப்பட்ட தவில் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது.
தவில்காரர்களின் சுமையைக் குறைத்த இந்த மாற்றங்கள், சத்தத்திலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டன. இவ்வளவு இறுக்கமாக இழுத்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எல்லோரும் மாட்டுத் தோலையே பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் தொப்பிக்கு ஆட்டுத் தோலையும் வலந்தலைக்கு கன்றுக் குட்டியின் தோலையும் பயன்படுத்தினார்கள். காகிதம் மாதிரிதான் தொப்பித் தோல் இருக்கும். ஆனால் அது எழுப்பும் நாதம் ஈடு இணையற்றது. தொடர்ந்து வாசிக்கும் போது கை மூலம் பரவும் சூட்டில் தவிலின் நாதம் மேலும் அதிகரிக்கும். இப்போதெல்லாம் டிக்கி டிக்கி என்று வலந்தலையில் சத்தம் கேட்கிறது. தொப்பியின் சத்தம் பெரும்பாலும் வலந்தலையின் முழக்கத்தில் மூழ்கடிக்கப்படுகிறது. பழைய தவலில் உள்ளங்கையால் பொத்தி வாசிக்கும் போது ஜிம் ஜிம் என்ற நாதம் எழும். அதை இப்போது கேட்டு நாளாகிறது. வலந்தலையும் தொப்பியும் பொருத்தமாக இருப்பதையும் பழைய தவிலில் கேட்கலாம். இப்போது எழும் பேரொலி நாகசுர சத்தத்தை முற்றிலுமாக கேட்க விடாமல் செய்து விட்டது. நாகசுரம் எங்கோ கிணற்றில் வாசிப்பது போல் கேட்கிறது. இதற்காக இன்றைய தவில் வித்வான்களின் ஞானத்தையோ லயக் கணிசத்தையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நாகசுரத்துக்கு தவிலா, அல்லது தவிலுக்கு நாகசுரமா என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் புல்லாங்குழல், வயலின், சாக்சபோன், மாண்டலின் ஆகியவற்றுக்கு வாசிக்கும் போது தவில் வித்வான்கள் அடக்கி வாசிக்கிறார்களே அதை ஏன் நாகசுரத்துக்கு வாசிக்கும்போது கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், ஒரு காலத்தில் மாபெரும் தவில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள் கூட, தாங்கள் பக்க வாத்தியம் வாசிப்பவர்கள் என்ற நினைவோடுதான் வாசித்தார்கள். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பல ஆண்டுகள் திருவீழிமிழலை சகோதரர்களுக்கு தவில் வாசித்தார். அவரை எல்லோரும் மூன்றாவது நாகசுரம் என்றேதான் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவருடைய வாசிப்பு நாகசுரத்தில் இரண்டறக்கலந்து நின்றது. மலைக்கோட்டை பஞ்சாமி நன்றாகப் பாடுவார். நிறைய கீர்த்தனைகளுக்கு சிட்டசுரம் அமைத்திருக்கிறார். நிரவதி சுகதா என்ற இரவிசந்திரிகா கீர்த்தனைக்கு அவர்தான் சிட்டசுரம் அமைத்தார். இன்னொரு தவில் வித்வானான அம்மாசத்திரம் கண்ணுசாமி பிள்ளை, முடிகொண்டான் வெங்கட்ராமய்யருக்கு லய நுணுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். நீடாமங்கலம் சண்முகவடிவேலு பாடுவார். நன்றாக கஞ்சிரா வாசிப்பார். துரதிருஷ்டவசமாக 35 வயது நிறைவடைவதற்கு முன்பே காலமாகி விட்டார். நிறைய பேருக்கு தவில் வாத்தியாராக இருக்கும் திருநாகேஸ்வரம் சுப்புணி அவர்களின் தந்தை இரத்தினசாமி தவில் வாசித்தால், நாகசுர வித்வான்களுக்கு மறந்து போன சங்கதிகளெல்லாம் நினைவுக்கு வருமாம்.
தவில் வித்வான்கள் நாகசுரத்தில் இராகம் வாசிக்கும் போது லேசாக தட்டிக் கொண்டிருப்பார்கள். அது இராகத்தை ஒருபடி மேலே தூக்கிக் காட்டும். இராகம் வாசித்து முடித்ததும் உருட்டுச் சொல் அடிப்பார்கள். அது நாகசுரம் வாசிப்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். கீர்த்தனை வாசிக்கும்போது அப்படியே நிழலாகப் பின்தொடர்ந்து வாசிப்பார்கள். உதாரணத்துக்கு காருகுறிச்சி அருணாசலத்தின் நகுமோமு கீர்த்தனைக்கு நீடாமங்கலம் சண்முகவடிவேலு வாசித்திருப்பதைக் கேட்கவேண்டும். பல்லவிக்கும் அனுபல்லவிக்கும், சரணத்துக்கும் இடையே உள்ள நேரத்தை தவில் வாசிப்பவர்கள் நிரப்பும் அழகே அழகு.
இரும்புப் பட்டைகளும் ராடுகளும் தவலில் குடியேறிய பிறகு அதனுடைய எடையும் அதிகரித்து விட்டது. ஆகவே நின்று கொண்டு தவில் வாசிப்பதற்கு பெரிய தவில் வித்வான்கள் ஒப்புக் கொள்வதில்லை. தோளில் சுமந்து கொண்டு வாசிப்பதற்கு கடினம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் நின்று கொண்டு மல்லாரிக்கு வாசித்து பிரமிப்பை ஏற்படுத்திய தவில் வித்வான்கள், இரத வீதிகளில் உடலெல்லாம் வியர்வை வழிய வாசித்துக் கொண்டு வந்த வித்வான்கள், இப்போது இருந்து கொண்டு மட்டுமே வாசிக்க ஒப்புக் கொள்கிறார்கள். இது விரும்பத்தக்க மாற்றமா அல்லது விரும்பத்தகாத மாற்றமா என்று தெரியவில்லை. கோயிலில் இருந்து சபாக்களுக்கு அரங்கேறிய வாய்ப்பாட்டும், நாட்டியமும் சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொண்டன. ஆனால் நாகசுரத்துக்கும் தவிலுக்கும் தேவையான அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இந்த இரண்டு வாத்தியங்களையும் வாசிக்கிறார்கள். மற்றவர்கள் இதன் பக்கம் திரும்புவதில்லை. அதே சமயம், ஒரு கட்டத்தில் தேக்க நிலையை அடைந்த நாகசுரமும் தவிலும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. சென்னையில் கிருஷ்ணகான சபையும், பிரம்ம கான சபையும் தனியாக நாகசுர இசை விழா நடத்துகிறார்கள். இரசிகர்கள் நிர்பந்தத்தை உருவாக்கும் போது இந்த இரண்டு வாத்தியங்களும் தங்களுடைய கடந்த கால அந்தஸ்தை எட்டிப்பிடிக்கலாம்.
இந்த நினைவுகளோடு வீட்டுக்கு வந்து 1962-ஆம் ஆண்டு காருகுறிச்சி அருணாசலமும் நீடாமங்கலம் சண்முக வடிவேலும் வாசித்த கச்சேரியைக் கேட்டேன். முப்பது ஆண்டுகள் முன்னதாகப் பிறந்திருக்கவில்லையே என்ற ஆதங்கம் மீண்டும் என்னுள் வளர்ந்து விசுவரூபம் கொண்டது. கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குள் அடக்கும் வித்தைத் தெரிந்தவர்களை தேடுகிறேன். தெரிந்தால் சொல்லுங்கள்.
தவில் புகைப்படம் - நன்றி: ஓவியர் ஜீவானந்தம்.
Subscribe to:
Posts (Atom)